ரூ.21½ லட்சம் மோசடி வழக்கில் 2 என்ஜினீயர்கள் கைது

புதுவை தொழில் அதிபருக்கு அமெரிக்க டாலர்கள் தருவதாக கூறி ரூ.21½ லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-22 15:50 GMT

புதுச்சேரி


தொழில் அதிபர்

புதுச்சேரி ஆனந்த ரங்கபிள்ளை நகரை சேர்ந்தவர் ஜெயரட்சகன் (வயது 46). இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் புதுச்சேரியில் ஆன்லைனில் முதலீடு செய்யும் தொழிலும் செய்து வந்தார். கடந்த மாதம் 'கிரிப்டோ கரன்சி' வாங்குவதற்காக பினான்ஸ் என்ற நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்தார்.

இந்த நிலையில் அவரது வாட்ஸ்-அப்புக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் தனது பெயர் சுகாஷ் (25) என்றும் தென்னிந்தியாவிற்கான பினான்ஸ் கம்பெனியின் நிர்வாகி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே ஜெயரட்சகன் அவரிடம் தனக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் கூறியபடி பல்வேறு தவணைகளாக ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்.

பணம் அனுப்பி ஒரு மாதத்துக்கு மேலாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் எதுவும் வந்து சேரவில்லை. உடனே அவர் சுகாஷ் என்பவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

2 என்ஜினீயர்கள் கைது

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் சுகாஷ் பெங்களூரு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் போலீஸ் தனிப்படை அங்கு விரைந்து சென்று சுகாஷை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரது நண்பர் சித்தார்த் (26) என்பவர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயர்களாக வேலை செய்து வருகின்றனர்.

செல்போன், லேப்-டாப் பறிமுதல்

அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 20 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், லேப் டாப், 5 வங்கி கணக்கு புத்தகங்கள், 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பேரையும் புதுவைக்கு அழைத்து வந்து நீதிபதி மோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களது வங்கி கணக்குகளை முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்