2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தவளக்குப்பம் அருகே 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய முகமூடி ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த புட்லாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலையில் பூசாரி வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உண்டியலில் போடப்பட்ட காணிக்கை பணம் திருட்டு போயிருந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தபோது, இரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கோவில் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.
மற்றொரு கோவில்
தவளக்குப்பம் சிக்னல் அருகில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலிலும் இதே போன்று முகமூடி கும்பல் உண்டியலை உடைத்து திருடியுள்ளதும் தெரியவந்துள்ளது.
புகாரின் பேரில் தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் 2 கோவில்களுக்கும் விரைந்து சென்று பார்வையிட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மூகமுடி அணிந்தபடி திருடர்கள் வந்தது பதிவாகி இருந்தது. 2 கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணம் என்பதால், எவ்வளவு தொகை திருட்டுப்போனது என தெரியவில்லை.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.