கத்தியுடன் பதுங்கிய 2 ஆட்டோ டிரைவர்கள் கைது
அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க கத்தி யுடன் பதுங்கிய 2 ஆட்டோ டிரைவர்களை தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்
அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க கத்தி யுடன் பதுங்கிய 2 ஆட்டோ டிரைவர்களை தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் ரோந்து
புதுச்சேரி தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஹரிஷ் மற்றும் வசந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இடையார்பாளையம் அலுத்தவேலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்கள்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரியாங்குப்பம் ஓடைவெளி அனுகார்டன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (வயது 33), புதுவை வாணரப் பேட்டை சின்ன எல்லையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்தி (34) என தெரியவந்தது.
பழிக்குப்பழி வாங்க சதி
மேலும் அவர்களை சோதனை செய்ததில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், "கடந்த மார்ச் மாதம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஞானசேகரன் அடித்துக் கொன்று புதைக்கப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஓடைவெளி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் அப்போது கைதானார். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஞானசேகரன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது தம்பியான வெங்கடேசன் தனது கூட்டாளியான கார்த்தியுடன் சதி திட்டம் தீட்டி கத்தியுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.