வீடு புகுந்து பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேர் கைது

தவளக்குப்பத்தில் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-28 17:06 GMT

அரியாங்குப்பம்

தவளக்குப்பத்தில் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பித்தளை பாத்திரங்கள் திருட்டு

தவளக்குப்பம் சதாநகர் வேதவல்லி வீதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 52). பழ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், வீட்டை பூட்டிவிட்டு பழ வியாபாரத்துக்கு சென்று விட்டார். வியாபாரம் முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இந்தநிலையில் தவளக்குப்பம் நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் 2 பேர் சாக்குமூட்டைகளுடன் சென்றனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, பித்தளை பாத்திரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அவர்கள், தவளக்குப்பம் ராமதாஸ் நகரை சேர்ந்த கார்த்திக் என்ற முத்துக்குமரன் (29), சடா நகர் பெருமாள் வீதியை சேர்ந்த ராஜி என்ற ராஜேஷ் (32) என்பதும், பழ வியாபாரி மல்லிகா வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த பித்தளை பாத்திரங்களை விற்பதற்காக மூட்டைகளாக கட்டிக்கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பித்தளை பாத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்