புதுச்சேரி மாநிலத்துக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும்

மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் புதுவை மாநிலத்துக்கு 100 சதவீத நிதியை வழங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

Update: 2022-09-03 16:27 GMT

புதுச்சேரி

மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களில் புதுவை மாநிலத்துக்கு 100 சதவீத நிதியை வழங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

கவுன்சில் கூட்டம்

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தென்மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை, உள்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

விமான நிலைய விரிவாக்கம்

மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைய இதுபோன்ற கூட்டங்களை போதிய இடைவெளியில் நடத்தவேண்டும். திருப்பதியில் நடந்த கூட்டத்தில் 46 விதமான பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 21 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக பகுதியில் 395 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதன் மூலம் அருகிலுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களும் பயன்பெறும். அதேபோல் காரைக்கால் பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டுவர அனுமதிக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.

ஆறுகள் இணைப்பு

இந்த மணல் அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்த அத்தியாவசிய தேவையாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த 29-வது கவுன்சில் கூட்டத்தில் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் உறுதி அளித்திருந்தார். இருந்தபோதிலும்இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க இந்திராவதி-கிருஷ்ணா-கோதாவரி, பெண்ணாறு, காவிரி ஆறுகள் இணைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சம் பூக்கோள ரீதியிலான அறிக்கை தயார் செய்துள்ளது. மேலும் வரகாநதி-தென்பெண்ணையாறு இணைக்கப்பட வேண்டும்.

புதுவையில் விவசாயம், குடிநீர், தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீரையே நம்பியுள்ளோம். புதுவை கடலோர பகுதி என்பதால் நிலத்தடி நீரை எடுப்பதால் கடல்நீரும் உட்புகுகிறது. தற்போதைய நிலவரப்படி 5.75 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. 2040-ல் இந்த தேவை 7 டி.எம்.சி.யாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வரகாநதி, தென்பெண்ணையாறு, கோதாவரி, காவிரி இணைப்பு என்பது அவசியமாகிறது.

100 சதவீத நிதியுதவி

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் சேர்க்கப்படவில்லை. மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு 60:40 என்ற அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. எனவே யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு 100 சதவீத நிதியுதவி அளிக்கவேண்டும்.

புதுச்சேரிக்கு மத்திய அரசின் நிதியுதவி (-8 சதவீதம்) குறைந்துள்ளது. புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரத்து 200 கோடி வழங்கவேண்டும். அடிப்படை கட்டமைப்புகள், விமான நிலைய விரிவாக்கம், துறைமுக இணைப்பு, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு, புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவதற்கு இந்த நிதி தேவைப்படுகிறது.புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களும் பக்கத்து மாநிலங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இருமாநிலங்களிலும் நலத்திட்டங்களை பெற்று பயனடைகிறார்கள். எனவே முறைகேடுகளை தடுக்க ஒட்டுமொத்தமாக ஆதார் எண்களை இணைக்கவேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்