அரசுப்பள்ளி மாணவர்களின் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-09-04 16:40 GMT

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சில விளக்கங்களை மத்திய அரசு கேட்டது. அதற்கு புதுவை அரசு சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கோப்பு சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டது..

ரங்கசாமி பேச்சு

10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடர்ந்து மத்திய அரசை தொடர்புகொண்டு பேசி வந்தனர்.. இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற்று தருமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷாவும் உறுதியளித்தார்.

மத்திய அரசு அனுமதி

இந்தநிலையில் இன்று மத்திய அரசு புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக புதுவை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் 37 மருத்துவ கல்வி (எம்.பி.பி.எஸ்.) இடங்கள் கிடைக்க உள்ளது. அதாவது புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 131 இடங்களில் 13 இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசின் இடஒதுக்கீட்டின்படி பிம்ஸ் கல்லூரியில் மருத்துவக்கல்லூரியில் 6 இடங்களும், ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்லூரியில் 9 இடங்களும், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் 9 இடங்களும் கிடைக்கிறது.

இதேபோல் பல் மருத்துவக்கல்லூரிகளில் கோரிமேடு மகாத்மாகாந்தி பல் மருத்துவக்கல்லூரியில் உள்ள 42 இடங்களில் 4 இடங்களும், தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளான மாகி பல் மருத்துவக்கல்லூரியில் 4 இடங்களும், ஸ்ரீவெங்கடேஸ்வரால் பல் மருத்துவக்கல்லூரியில் 3 இடங்களும் கிடைக்கிறது.

52 இடங்கள் பெறுவர்

மேலும் மாகியில் உள்ள ராஜீவ்காந்தி ஆயுர்வேத அரசு கல்லூரியில் உள்ள 44 இடங்களில் 4 இடங்களும் கிடைக்கின்றன. ஒட்டுமொத்தமாக மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதா என 52 இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள் பெறுகின்றனர்.

மத்திய அரசின் அனுமதி மூலம் நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு கிட்டி உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் ஓரிரு நாளில் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்