புறவழிச்சாலை முழுவதும் மின்விளக்கு
காரைக்காலில் புறவழிச்சாலை முழுவதும் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.;
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் அதிகாரிகளுடன், காரைக்கால் மேற்கு பகுதியில் அமைந்துள்ள காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழிச் சாலையை ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழிச்சாலையில் வாகனங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்வதால், சாலை முழுவதும் மின் விளக்குகளை உடனடியாக அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார். மேலும் இச்சாலையை ஒட்டி, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி பணிகள் நடைபெறுவதால், முக்கிய இடங்களில் உயர்மின் விளக்கு கோபுரங்களை அமைக்கவும், சாலைப் பகுதியில் (டிவைடரில்) செடிகள் வைத்து பராமரிக்கவேண்டும். அத்துடன், சாலையின் இரு புறமும் உள்ள மரங்களையும் பராமரிக்கவேண்டும். என்றார். அதனைத்தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருடன் சென்று கிராமச்சாலைகளை பார்வையிட்டு, அங்கு சாலைப் பணிகளை விரைவாக தொடங்கி முடிக்கவேண்டும் என கேட்டுகொண்டார்.