காரை ரிவர்ஸ் எடுத்தபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: பெண் பலி - அதிர்ச்சி வீடியோ
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தின் சத்ரபதி சாம்பாஜி நகரின் சுலிபஞ்சன் மலை பகுதியில் கார் ஓட்டிப் பழகிய ஸ்வேதா (23) என்ற இளம்பெண் காருடன் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வேதா ஓட்டிய கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்திய காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்த கார் மலையின் உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் பாய்ந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்வேதாவின் நண்பர் சிவ்ராஜ், அவர் கார் ஓட்டுவதை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் வெள்ளை நிற காரை நிதானமாக பின்னோக்கி செலுத்துகிறார் ஸ்வேதா. அதனை அவரது நண்பர் வீடியோ பதிவு செய்யும் பணியில் இருந்தார். அப்போது திடீரென ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்த கார் 300 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்துள்ளது. கிளட்சை அழுத்துமாறு சிவ்ராஜ் கூச்சலிடுகிறார் இருந்தும் கார் பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
பள்ளத்தாக்கில் விழுந்த ஸ்வேதாவை அடையாளம் கண்டு மீட்டு வரவே சுமார் 1 மணி நேரம் ஆகியுள்ளது. பயங்கர காயங்களுடன் இருந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.