பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; நாடு முழுவதும் 24 மணிநேரம் மருத்துவ சேவைகள் ரத்து அறிவிப்பு

வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்களும் டாக்டர்களின் போராட்டத்தில் அவர்களுடன் கரம் கோர்க்கின்றனர்.

Update: 2024-08-15 21:43 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

இதன்படி, ஆகஸ்டு 17-ந்தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18-ந்தேதி காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என அறிக்கை தெரிவிக்கின்றது.

அனைத்து அத்தியாவசிய சேவைகளும் பராமரிக்கப்படும். டாக்டர்களின் நியாயம் வாய்ந்த காரணங்களுக்கான தேசத்தின் இரக்கம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்களும் டாக்டர்களின் போராட்டத்தில் அவர்களுடன் கரம் கோர்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்