2015ம் ஆண்டுக்குப் பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம்: சிஏஏ குறித்து அசாம் முதல்-மந்திரி

4 மாதங்களில் 8 பேர் மட்டுமே சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-07-15 10:49 GMT

கோப்புப்படம்

திஸ்பூர்,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று சிஏஏவுக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளின்படி 2015-க்குப் பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ""2015ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா வந்தவர்களுக்கு சிஏஏ விதிகளின்படி விண்ணப்பிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல், இந்தியாவுக்குள் வந்தவர்கள் சிஏஏ-வின் கீழ் விண்ணப்பிக்க தவறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மார்ச் மாதம், அசாம் மாநிலத்தில் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் இருக்கின்றனர். இதனால் சிஏஏ சட்டம் முற்றிலும் முக்கியமற்றது.

மேலும், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவுக்குள் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை சிஏஏ சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இதுவரை 8 பேர் மட்டுமே சிஏஏ சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். அதில் இருவர் மட்டுமே அரசின் நேர்காணலில் பங்கேற்றனர்" என்று ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.

இதனிடையே குடியுரிமை திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் 50 லட்சம் வரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற முடியும் என்று கூறிய அவர், சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மக்களை எப்படி பயமுறுத்த முயன்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அசாமில் குடியுரிமை என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். 2019 ம் ஆண்டில் அசாமில் சிஏஏ-விற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்