மேற்கு வங்காளத்தை உலுக்கிய கட்டப்பஞ்சாயத்து தண்டனை... கள்ளக்காதல் ஜோடியை தாக்கிய நபர் கைது

வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த இஸ்லாம்பூர் போலீசார், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Update: 2024-07-01 06:14 GMT

இஸ்லாம்பூர் காவல் நிலையம்

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு ஆணையும், பெண்ணையும் ஒருவர் சரமாரியாக பிரம்பால் அடித்தார். அந்த பெண், வலியால் அலறித் துடித்தார். அந்த காட்சியை பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். பிரம்பால் அடிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆனது.

அடி வாங்கிய கிராமவாசிகளான ஆணும், பெண்ணும் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கிராமத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்தில் அவர்களுக்கு பிரம்படி தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை ஒருவர் மூங்கில் பிரம்பால் அடித்ததாக தெரிய வந்தது.

பிரம்பால் அடித்த நபர், உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரான தஜிமுல் என்றும், சோப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹமிதுல் ரகுமானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது. தலிபான் பாணியில் பெண்ணை தண்டிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

'இந்த சம்பவத்தை பார்க்கையில், மேற்கு வங்காளத்தில் தலிபான் ஆட்சி நடப்பதைப் போல் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு குண்டர்களால் ஆணும் பெண்ணும் இரக்கமின்றி தாக்கப்பட்ட விதம் கொடுமையானது. அந்த வீடியோவில் இருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் கூட்டாளி. அரசு நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை' என பா.ஜ.க. மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.

மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 28-ம் தேதி நடந்துள்ளது. சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. எனினும், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த இஸ்லாம்பூர் போலீசார், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்திய தஜிமுல் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கலாம் என தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்