'ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்' - அமித்ஷா நம்பிக்கை
ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ஜார்க்கண்டில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைத்த பிறகு, பழங்குடியின மக்கள், அவர்களின் நிலங்கள், அவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உரிமைகளை பாதுகாக்க மக்கள்தொகை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம்.
ஊடுருவல்காரர்கள் ஜார்கண்டிற்குள் நுழைந்து, பழங்குடியினப் பெண்களை திருமணம் செய்து, சான்றிதழ்களைப் பெற்று, இங்கு நிலத்தை வாங்குகிறார்கள். ஜார்க்கண்டின் முதல்-மந்திரி, தனது வாக்கு வங்கிக்காக திருப்திப்படுத்தும் அரசியலை செய்து வருகிறார்.
மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தாலும், தோல்வியை ஏற்க முடியாமல் ராகுல் காந்தி உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆணவத்துடன் பேசி வருகின்றனர். 2014, 2019, 2024 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற மொத்த இடங்களை விட இந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு, நாட்டின் ஊழல் நிறைந்த அரசாங்கங்களில் ஒன்றாகும். இந்த அரசை மக்கள் வெளியேற்ற வேண்டிய நேரம் இது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.