வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 135 பேர் பலியான நிலையில், நேற்றும், இன்றும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது.;
வயநாடு,
கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவிலும் பின்னர், 4.30 மணியளவிலும் என அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
கேரளாவில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகின்றன. இதில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பொதுமக்கள் தப்பி செல்ல முடியாதபடி சிக்கி கொண்டனர்.
அவர்களில் பலர் வெள்ள நீரால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் உடல்கள் மண்ணில் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, 98 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடருகிறது. 128 பேர் சிகிச்சையில் உள்ளனர். 481 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 3,069 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
400 குடும்பங்கள் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி இன்றும் மேற்கொள்ளப்படுகிறது. சாலியார் ஆற்றில் இருந்து 31 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. உயிரிழந்தவர்களின் 39 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 32 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
நிலச்சரிவை தொடர்ந்து, முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டு உள்ள செய்தியில், முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு கேரள வங்கி முன்பே ரூ.50 லட்சம் தொகையை வழங்கியிருக்கிறது. கொச்சின் சர்வதேச விமான நிலையம் ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவோம் என்று உறுதியளித்து உள்ளது.
தமிழக முதல்-மந்திரி மு.க. ஸ்டாலின், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.
வயநாடு பேரிடரை அடுத்து, கேரளாவில் அதிகாரப்பூர்வ முறையில் 2 நாட்கள் இரங்கல் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதேபோன்று, பொது நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒத்தி வைக்கப்படும். இந்த கால கட்டத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதன்படி, கேரளாவில் நேற்றும், இன்றும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. கேரளாவில் கனமழை எதிரொலியாக 11 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, வயநாடு, இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், திருச்சூர், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், பொது தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும் அதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.