வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - ராகுல் காந்தி
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வயநாடு,
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையின் காரணமாக, வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில், அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள சூரல்மலை என்ற இடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் அடித்து செல்லப்பட்டதால் 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் "வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
கேரள முதல்-மந்திரி மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்கவும், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை எங்களுக்குத் தெரிவிக்கவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வயநாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அமைச்சர்களிடம் பேசவுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவுமாறு அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.