வெளியுறவுத்துறை இணை மந்திரி குவைத் பயணம்

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-06-12 13:48 GMT

டெல்லி,

குவைத் நாட்டில் தெற்கு பகுதியில் அகமதி மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் மங்கப் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

இதனிடையே, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும், கட்டிடத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டோரை காயங்களுடன் மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கேவி சிங் அவசர பயணமாக குவைத் புறப்பட்டு சென்றுள்ளார். தீ விபத்தில் இந்தியர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் உயிரிழப்புகளும் அரங்கேறியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போதிய உதவிகளை மேற்கொள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி குவைத் புறப்பட்டு சென்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்