இந்து கோவில் மீதான தாக்குதல்: கனடா பிரதமரை கடுமையாக சாடிய மத்திய மந்திரி
கனடாவில் இந்து கோவில் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக மத்திய மந்திரி ரேவநத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் டொரன்டோ மாகாணத்துக்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். கோவிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர்.
கனடாவில் இந்துக்கள் மீதும் இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு பிரதமரை மத்திய மந்திரி ரேவநத் சிங் பிட்டு கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியாதாவது,
"கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கேவலமான அரசியலுக்காக வெற்றிகரமாக பிளவுப்படுத்தியுள்ளார். சீக்கியர்களும் இந்துக்களும் இந்தியாவில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் கனடாவில் ஒருவருக்கொருவர் எதிராக களமிறங்குகின்றனர். இந்துக்கள் மீதும் இந்து கோவில்கள் மீதும் நடத்திய தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காவல்துறை காலிஸ்தான் பிரிவினருக்கு ஆதரவாக நிற்கின்றனர். கோவில்கள் தாக்கப்படுகின்றன. யாரும் தடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் எப்படி கோஷம் எழுப்புகிறார்கள் மற்றும் காலிஸ்தான் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்திற்கு பிறகு கனடா நாட்டிற்கும், அந்நாட்டு பிரதமருக்கு இது குறித்து கருத்துக்கூற தகுதியில்லை." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.