புனே பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கைது

கையில் துப்பாக்கியுடன் உள்ளூர் விவசாயிகளை மிரட்டும் புகைப்படும் வைரலானதையடுத்து பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-07-18 08:02 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மராட்டிய அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன் விளக்கையும் பயன்படுத்தி வந்தார். மேலும் கூடுதல் கலெக்டர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் அறையை பூஜா ஆக்கிரமித்து கொண்ட தாகவும் புகார் எழுந்தது. இவர் மீதான புகார்களை தொடர்ந்து மாநில தலைமை செயலாளருக்கு புனே மாவட்ட கலெக்டர் சுகாஸ் திவாசே கடிதம் அனுப்பினார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓ.பி.சி. இடஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க ஒருநபர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பூஜா கேத்கர் அளித்த ஆவணங்களையும், தேர்வு பெற்ற பிறகு அளித்த ஆவணங்களையும் அக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் பூஜா கேத்கர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தன. இதனையடுத்து, மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து அவரை மராட்டிய மாநில அரசு விடுவித்து உள்ளது.

இதற்கிடையே பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் கையில் துப்பாக்கியுடன் உள்ளூர் விவசாயிகளை மிரட்டும் புகைப்படைங்கள் எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து பாட் போலீசார் பூஜாவின் பெற்றோர் திலீப் கேத்கர்-மனோரமா கேத்கர் மீது விவசாயிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கரை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் பகுதியில் வைத்து புனே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரை புனே அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்