ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புச்சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புச்சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புச்சாவடியில் இருந்த பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த துப்பாக்கி சூடால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா பகுதியில் உள்ள பாதுகாப்புச்சாவடியில் அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதையடுத்து தப்பி சென்றனர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
முன்னதாக, கடந்த 18ம் தேதி குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.