நீட் தேர்வு முறைகேடு: லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? - பிரியங்கா காந்தி கேள்வி

நீட் தேர்வு முடிவுகள் குறித்து விசாரணை நடத்தி சட்டப்பூர்வ புகார்களை தீர்ப்பது அரசின் பொறுப்பு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-07 07:11 GMT

புதுடெல்லி,

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அதிலும் அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆனால் தேசிய தேர்வு முகவை இந்த முறைகேடுகளை மறுத்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு மையங்களில் நேரத்தை செலவிட்டதற்கான கருணை மதிப்பெண் உள்ளிட்ட காரணங்களுக்காக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் நீட் தேர்வுத்தாள் கசிந்தது, இப்போது அதன் முடிவுகளிலும் மோசடி நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரே மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு பலவிதமான குளறுபடிகள் வெளிவருகின்றன. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மிகவும் வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் நடந்த குளறுபடிகள் தொடர்பான நியாயமான மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விசாரணை நடத்தி சட்டப்பூர்வ புகார்களை தீர்ப்பது அரசின் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்