5ஜி மேம்பட்ட சேவை: வெறும் ரூ.11,340 கோடிக்கு ஏலம் போன அலைக்கற்றைகள்

5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றைகள் வெறும் ரூ.11 ஆயிரத்து 340 கோடிக்கு மட்டுமே ஏலம் போயின. கேட்பவர் இல்லாததால் 2 நாட்களில் ஏலம் முடிவடைந்தது.

Update: 2024-06-26 23:40 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

செல்போன்களின் குரல், இணையதள சிக்னல்களுக்கான அலைக்கற்றைகளை (ஸ்பெக்ட்ரம்) தொலைத்தொடர்பு துறை ஏலம் விட்டு வருகிறது.

அந்தவகையில் 5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றைகள் ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் 10 ஆயிரத்து 522 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றைகள் ஏலத்துக்கு முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கான குறைந்தபட்ச மதிப்பு ரூ.96 ஆயிரத்து 238 கோடி என்று மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது.

இந்த அலைக்கற்றைகள், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ், 2,300 ெமகா ஹெர்ட்ஸ், 2,500 மெகா ஹெர்ட்ஸ், 3,300 மெகா ஹெர்ட்ஸ் என்ற அளவுகளில் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

முதல் நாளில், 5 சுற்று ஏலம் நடந்தது. ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் அலைக்கற்றைகள் ஏலம் சென்றன. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், தங்கள் சேவையை விரிவுபடுத்துவதற்காக 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றைகளை மட்டுமே வாங்கின.

ஆனால், இரண்டாம் நாளான நேற்று, சொல்லிக்கொள்ளும்படி ஏலம் போகவில்லை. 140 மெகா ஹெர்ட்ஸ் முதல் 150 மெகா ஹெர்ட்ஸ் வரை மட்டுமே விற்கப்பட்டன.

முதல் சுற்றுக்கு பிறகு யாரும் கேட்கவில்லை. அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு கிராக்கி இல்லாவிட்டால், ஏலத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது ஏலத்தின் விதிமுறை ஆகும். எனவே, காலை 11.30 மணிக்குள் ஏலம் முடிவுக்கு வந்தது. இதனால் 2 நாட்களில் ஏலம் முடிவடைந்தது.

மொத்தம் ரூ.11 ஆயிரத்து 340 கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இது, மொத்த குறைந்தபட்ச மதிப்பில் 12 சதவீதத்துக்கும் குறைவு ஆகும். இன்னும் ஏராளமான அலைக்கற்றைகள் விற்பனை ஆகாமல் உள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம், 7 நாட்கள் நடந்தது. ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது.

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ரூ.88 ஆயிரத்து 78 கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகளை வாங்கியது. ஏர்டெல் நிறுவனம், ரூ.43 ஆயிரத்து 84 கோடிக்கும், வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.18 ஆயிரத்து 799 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

Tags:    

மேலும் செய்திகள்