டெல்லியில் வெளுத்து வாங்கும் மழை: ரெட் அலெர்ட் எச்சரிக்கை-பள்ளிகளுக்கு விடுமுறை
5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
தென்மேற்கு பருவமழை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் பேய் மழை பெய்து வருகிறது. கேரளாவின் வயநாட்டில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 27ம் தேதி பெய்த கனமழையின் போது, அங்குள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்திற்குள் வெள்ளம் புகுந்தது.
இதில் கோச்சிங் சென்டரில் படித்து வந்த மாணவர்கள் 3 பேர் பலியாகினர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் அதன்பிறகு சற்று மழை தணிந்த நிலையில், தற்போது மீண்டும் மழை அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக சர்ச்சைக்குள்ளான ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடம் அமைந்துள்ள பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.
கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பல்வேறு சாலைகள் மூடப்பட்டன. நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதி, ஐ.டி.ஓ., சந்திப்பு, கன்னாட் பிளேஸ், மோதி பாக் மேம்பாலம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன. இதற்கிடையே, இன்று டெல்லிக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 5-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.