இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டார்.

Update: 2024-06-26 15:55 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் சீனர்கள் போலவும், மேற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் உள்ளனர். ஆனாலும் நாம் அனைவரும் சகோதர, சதோதரிகள்" என கூறியிருந்தார்.

சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, நிறத்தின் அடிப்படையில் அவமானப்படுத்துவதை நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார். இந்த விவகாரத்தை தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலக முடிவு செய்துள்ளதாகவும், அவரது முடிவை கட்சி தலைமை ஏற்றுக்கொண்டதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.

இந்த நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாம் பிட்ரோடாவை மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்வதற்கு காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்