கவர்னர் மகனை கைது செய்யக்கோரி ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

கவர்னர் மகனை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் சட்டசபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.;

Update:2024-07-24 17:15 IST

புவனேஷ்வர்,

ஒடிசா கவர்னர் ரகுபர் தாசின் மகன் லலித் குமார். இவர் கடந்த 7ம் தேதி ராஜ்பவன் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து, கடந்த 22ம் தேதி ஒடிசா சட்டசபை கவர்னர் ரகுபர் தாஸ் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னரின் உரைக்கு கண்டனம் தெரிவித்தும், அவரது மகன் லலித் தாசை கண்டித்தும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டசபை நேற்று மீண்டும் தொடங்கியபோது, கவர்னர் மகனுக்கு எதிராக அம்மாநில முதல்-மந்திரி மோகன் மாஜி அறிக்கை வெளியிடக்கோரி எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 3வது நாளான இன்றும் சட்டசபையில் கவர்னர் மகனை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் சுரமா பதி முதலில் சபையை காலை 11.30 மணி வரையும், பின்னர் 12 மணி வரையும் ஒத்திவைத்தார். அதன் பின்பு தொடர்ந்த அமளியால் சபை மாலை 4 மணி வரை ஒத்திவைக்க சபாநாயகர் உத்தரவிட்டார்

மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கவர்னர் மகனை காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ராஜ்பவன் ஊழியரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கவர்னர் மகன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்