போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு மே.வங்க அரசு மீண்டும் அழைப்பு

மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு மீண்டும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2024-09-16 08:51 GMT

கொல்கத்தா,

 மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி வேண்டும் எனக் கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொல்கத்தாவின் சால்ட் லேக் என்ற பகுதியில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை, முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினார். இதை அவர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், சுகாதார துறை தலைமை அலுவலகம் முன்பு, தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்துள்ளது, இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பயிற்சி மருத்துவர்களுக்கு இ மெயில் மூலமாக மே.வங்க சுகாதாரத்துறை செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்