உ.பி. சம்பல் மாவட்டத்திற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி
உ.பி.யில் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு நாளை ராகுல் காந்தி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இது கலவரமாக மாறியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மற்ற 5 கட்சி எம்.பி.க்களுடன் நாளை சம்பலுக்கு செல்லவுள்ளதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். அப்போது ராகுல் காந்தியுடன் உ.பி. பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே உடன் இருப்பார் என தெரிவித்தார். ராகுல் காந்தியுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு எம்பி பிரியங்கா காந்தியும் உடன் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.