பொற்கோவிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரியை சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியால் பரபரப்பு
பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதலை பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.;
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலில் முன்னாள் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. நூலிழையில் அவர் உயிர் தப்பிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்
பொற்கோவிலின் வாயிலில் வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்த சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
முன்னதாக அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஈட்டியுடன் சுக்பீர்சிங் பாதல் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுக்பீர் சிங் பாதலின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர். இதனால் பஞ்சாப் பொற்கோவிலில் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நாராயண் சிங் சவுரா என்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அகாலிதளம் கட்சியின் முந்தய ஆட்சியில் செய்த தவறுகளுக்காக சுக்பீ சிங் பாதலுக்கு, சீக்கிய அமைப்பு மத தண்டனை விதித்தது. இதனால், அவர் பொற்கோயிலில் தூய்மை மற்றும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.