புதுச்சேரி: மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மாஹேவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
புதுச்சேரி,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வடதமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென்தமிதழகத்தில் ஒரு சில இடங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை காணப்பட்டது.
இந்த சூழலில் கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியின் மாஹேவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 16) விடுமுறை அளிக்கப்படுவதாக பிராந்திய நிர்வாகி மோகன் குமார் தெரிவித்துள்ளார்.