மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Update: 2024-08-10 03:39 GMT

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்த (57 கிலோ எடைபிரிவு) போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அமன் ஷெராவத் பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இளம் மல்யுத்த வீரர்களில் ஒருவரான அவர், தனது முதல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.

எதிர்காலத்தில் அவர், இந்தியாவுக்காக பல பதக்கங்களையும் பாராட்டுக்களையும் வெல்வார். அவரது வெற்றியின் மூலம், மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் பாரம்பரியத்தை இந்தியா தொடர்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு வாழ்த்துகள். அவருடைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. இந்த அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்