டெல்லி, மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம்
தீபாவளி முடிந்தநிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தலைநகரான டெல்லியில் அதிகாலை முதலே அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது. இந்நிலையில்,டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 396-ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், மும்பை நகரின் சில பகுதிகளில் இன்று காலை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் நகரமும் புகை மண்டலாக காட்சியளித்தது. டெல்லி, மும்பையில் பல்வேறு பகுதிகளில், காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றுமாசுபாட்டை குறைக்க வாகனம் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக, தேசியத் தலைநகரில் காற்று மாசு கணிசமாக அதிகரித்த நிலையில், இன்றும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது காற்றின் தரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்று தரக்குறியீடு அளவுகள் 4 வகைகளாக பிரிக்கப்படுகிறது. 201-300 மோசமானது, 301-400 மிகவும் மோசமானது. 401-450 கடுமையானது, 450-க்கும் மேல் கடுமையாக தீவிரமானது ஆகும்.