பிரதமர் மோடி நாளை கார்கில் பயணம்
கார்கில் வெற்றி தினத்தின் (கார்கில் விஜய் திவாஸ் 2024) வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார்.;
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் முன்னெடுத்தது. ஆனால் கடும் குளிரிலும் கொட்டும் பனியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் வீரத்தோடு எதிர்த்து போரிட்டு விரட்டியடித்தனர். 1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், 25வது (வெள்ளி விழா) கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சிகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார். போர் வீரர்கள் நினைவிடத்தில் காலை 9.20 மணியளவில் வீரவணக்கம் செலுத்துகிறார். பின்னர் அங்கு எல்லையை பாதுகாக்கும் வீரர்களுடன் கலந்துரையாடி இனிப்புகளை வழங்கிறார். முன்னதாக கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரதமர் மோடி கார்கில் பயணத்தின் போது, ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்க உள்ளார். ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லே-க்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு - படும் - தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும். இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும்.