எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-19 06:33 GMT

File image

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது அரசியல் வட்டாரங்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்