சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை

கோயம்பேடு சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று கணிசமாக குறைந்துள்ளது.;

Update: 2024-10-16 06:27 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னைக்கு ரெட் அலர்ட்(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர்.

இதனால் பல்பொருள் அங்காடிகள், காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை 30 ரூபாய் வரை குறைந்து, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பிற காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இதன்படி வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 50 ரூபாய்க்கும், கர்நாடக கேரட் 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ பீன்ஸ் 160 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட் 30 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 65 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 30 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் முருங்கைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், பட்டாணி 250 ரூபாய்க்கும், இஞ்சி 170 ரூபாய்க்கும், பூண்டு 350 ரூபாய்க்கும், அவரைக்காய் 80 ரூபாய்க்கும், தேங்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்