உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-12-29 09:38 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டில் முதல் முறையாக பிரதமரானார். அதன்பிறகு 2019ல் 2வது முறையாகவும், தற்போது 3வது முறையாகவும் பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடி 2014ல் இருந்து ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 118 வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். இதில் அவர் தமிழ் மொழி தான் உலகில் பழமையான மொழி என்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசினார். இதுதொடர்பாக மோடி பேசியதாவது:

உலகிலேயே மிகவும் பழமையான, மூத்த மொழி என்றால் அது தமிழ் தான். இதனை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் தமிழ்மொழியை கற்போரின் எண்ணிக்கை என்பது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் (Fiji) மத்திய அரசு சார்பில் தமிழ் கற்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பிஜியில் தமிழ் கற்று கொடுக்கின்றனர். பிஜியில் உள்ள மாணவர்கள் தமிழ் மொழி, கலாசாரத்தை கற்பதில் ஆர்வமாக உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி, 75 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மரபுடன் இணைக்க ஏதுவாக, http://Constitution75.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகள் பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்