மராட்டியத்தில் தொடர்ந்து அதிர்ச்சி சம்பவம்; போதையில் நபர் ஓட்டிய கார் மோதி பெண் பலி

மராட்டியத்தில் கார் மோதி பெண் பலியான சம்பவத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.;

Update: 2024-07-10 16:42 GMT

நாசிக்,

மராட்டியத்தின் நாசிக் நகரில் கங்காப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த 36 வயது பெண் ஒருவர் மீது விரைவாக வந்த கார் ஒன்று திடீரென நேற்று மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த பெண் பலியானார்.

இதுபற்றி காவல் துறை துணை ஆணையாளர் கிரண் குமார் சவான் இன்று கூறும்போது, 51 வயதுடைய நபர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த பெண் அர்ச்சனா கிஷோர் ஷிண்டே என தெரிய வந்துள்ளது.

அவர் ஓட்டலில் சமையல் செய்பவராக பணியாற்றி வந்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பும்போது, விபத்து ஏற்பட்டு உள்ளது. மராட்டியத்தில் சமீப காலங்களாக கார் மோதி விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வரும் பிரதீப் நகவா (வயது 50), என்பவர் கடந்த ஞாயிற்று கிழமை காலை 5.30 மணியளவில் மனைவி காவேரி நகவாவுடன் (வயது 45) மீன் வாங்க ஸ்கூட்டரில் சென்றபோது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. கார் இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் பிரதீப் தப்பியபோதும், 2 கி.மீ. தொலைவு வரை காரில் இழுத்து செல்லப்பட்ட காவேரி பின்னர் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தில், காரை குடிபோதையில் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது, ஆளும் கட்சியை சேர்ந்த துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

விபத்து நடந்து 72 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கடந்த மே மாதத்தில், புனே நகரில் குடிபோதையில் போர்ஷே ரக கார் ஒன்றை ஓட்டி சென்ற சிறுவன், பைக்கில் சென்ற 2 மென்பொருள் என்ஜினீயர்கள் மீது மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில், ரியல் எஸ்டேட் அதிபரான சிறுவனின் தந்தை, தாய் மற்றும் தாத்தா ஆகியோர் தடயங்களை அழிக்க முயன்ற குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சிறுவனை விடுவிக்கும்படி உத்தரவிட்டது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுவனிடம் 300 பக்க கட்டுரையை சமர்ப்பிக்க கூறி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதுபோன்று மராட்டியத்தில் புனே, மும்பையை அடுத்து நாசிக் என அடுத்தடுத்து கார் விபத்து சம்பவங்கள் நடந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்