அடுத்த 5 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க தீவிரமாக பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பா.ஜனதாவுக்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2024-07-03 09:09 GMT

புதுடெல்லி,

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, "ஜனாதிபதியின் உரை ஊக்கமளிப்பதாகவும் உண்மையின் பாதையை வழிநடத்துவதாக இருந்தது. நாட்டின் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததன் மூலம் இந்திய பொருளாதாரம் மூன்றாவது இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கம் உள்ளது. அரசியல் சாசனமே எங்களுக்கு வழிக்காட்டியாக இருக்கிறது.

ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதியான மற்றும் தீர்க்கமான போராட்டம் நடக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளிம்புநிலை சமூகங்களுக்கான அடிப்படை நலத்திட்டங்கள் நிறைவடையும். கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட சவாலான காலங்களிலும் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

விஸ்வகர்மா சமுதாயத்திற்காக ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டது, அதே நேரத்தில் பிரதமர் எஸ்.வி.நிதி திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பா.ஜனதாவுக்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளார்கள். பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரு அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. இது சாதாரண விசயம் அல்ல. ஆனால் சிலர் மக்களின் முடிவை ஏற்றுகொள்ள மறுக்கின்றனர்.

நாட்டு மக்களின் அறிவை கண்டு பெருமை கொள்கிறேன். தேர்தல் காலத்தில் மக்களின் முடிவு எதை காட்டுகிறது என்றால், அவர்கள் வெறும் பரப்புரையை நிராகரித்து விட்டனர். செயலுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். நம்பிக்கைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி செய்கையில் ஆட்டோ பைலட், ரிமோட் பைலட் என்ற முறையில் ஆட்சி செய்தனர். அவர்கள் செயலாற்றுவதில் நம்பிக்கையற்றவராக இருந்தனர்" என்று அவர் கூறினார்.

இதனிடையே மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால், பிரதமர் மோடி பேசும்போது அவையை விட்டு நாடாளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்