நீட் முறைகேடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம் தாக்கல்
நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், நீட் தேர்வை ரத்து செய்வது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்றது. பாட்னாவில் நடந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் வினாத்தாள் நகல்கள் தவறான வழிகளில் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இது போன்ற முறைகேடுகள் வழியாக பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு என்பது தேசிய தேர்வுகள் முகமை இயந்திரத்தின் ஒட்டுமொத்த குற்றம் அல்ல அது ஒரு சிறிய சம்பவம்தான். 61 மாணவர்கள் 720/720 மதிப்பெண் பெற்றதற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டதுதான் மிக முக்கிய காரணம்.
மத்திய அமைப்புகளின் விரிவான விசாரணைக்கு பிறகுதான் ஒட்டுமொத்த அமைப்பும் தவறிழைத்துள்ளதா என்பது பற்றிக் கூற முடியும். 2024 இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 63 முறைகேடு புகார்கள் தேசிய தேர்வு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.