பா.ஜனதா ஆட்சி அமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதாவிற்கு தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்ற நிலையில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மோடி இல்லத்திலிருந்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.
இதனையடுத்து,கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்த நிலையில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி. ஆட்சி அமைப்பதற்கு இன்றே உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைய சுயேட்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ஒரு மனதாக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பக்கத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.