தொடரும் வன்முறை: வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு

தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2024-08-06 06:54 GMT

டாக்கா,

ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தால் 14 காவலர்கள் உள்பட 98 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்காளதேசத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய தகவல் பரவ வங்காளதேச நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். பலர் கைக்கு கிடைத்த பொருட்களை சுருட்டிக்கொண்டு செல்வதையும் காணமுடிந்தது. வங்காளதேசத்தின் தந்தை என போற்றப்படுபவரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான முஜிபூர் ரகுமானின் சிலையையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

இந்நிலையில் வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான பங்களாதேஷ் அவமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் மோர்டாசாவின் வீட்டுக்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த தீ வைப்பு சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்