செல்போன் திருடியதாக இளைஞர் அடித்துக்கொலை - கிராமத்தினர் வெறிச்செயல்
செல்போன் திருடியதாக இளைஞரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
கவுகாத்தி,
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டம் பகன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று செல்போன் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த திருட்டு சம்பவத்தில் பலு கொவலா (வயது 27), டகு ஒரங் ஆகிய இளைஞர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த இரு இளைஞர்களையும் கிராமத்தினர் சிறைபிடித்து கடுமையாக தாக்கினர்.
கிராம மக்கள் கும்பலாக சேர்ந்து கடுமையாக தாக்கியதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இரு இளைஞர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கிராம மக்கள் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் பலு கொவலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.