கால்வாய்க்குள் பாய்ந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் கால்வாயில் கார் விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2024-05-29 07:34 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் காவத்தே - மஹாங்கல் தாலுகாவில் உள்ள கோகலே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் பிறந்தநாளில் கலந்து கொண்டுவிட்டு குடும்ப உறுப்பினர்கள் காரில் இன்று அதிகாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். சிச்சானி கிராமத்திற்கு அருகே வந்த அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தசாரி கால்வாயில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத காரணத்தால் காயமடைந்த பெண் ஆட்கள் வரும்வரை அங்கேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தாமதமாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்கள் ராஜேந்திர ஜக்னாத் பாட்டீல் (60), சுஜாதா ராஜேந்திர பாட்டீல் (55), பிரியங்கா அவதுத் கராடே (30), துருவா (3), கார்த்திகி (1) மற்றும் ராஜிவி(2) ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த பெண் ஸ்வப்னலி விகாஸ் போசலே (30) அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்