காதல், சூட்கேஸ் கொலை... வழக்கை தீர்க்க உதவிய காது கேளாத, வாய் பேசாத வாலிபர்

மராட்டியத்தின் மும்பை நகரில் ஜெய் பிரவீன் சாவ்டா மற்றும் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங் என்ற 2 பேர் சாதிக்அலிக்கு நண்பர்களாக இருந்துள்ளனர்.

Update: 2024-08-13 00:16 GMT

அர்ஷத்அலி சாதிக்அலி ஷேக்

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் தாதர் ஸ்டேசன் பகுதியில் கடந்த 5-ந்தேதி சூட்கேஸ் ஒன்று கிடந்தது. நீண்டநேரம் அதனை யாரும் எடுத்து செல்லாத நிலையில், போலீசாருக்கு தகவல் சென்றது.

அவர்கள் வந்து சோதனை செய்ததில், சூட்கேசுக்குள் இளைஞரின் உடல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர், அர்ஷத்அலி சாதிக்அலி ஷேக் (வயது 30) ஆவார்.

இதுபற்றிய போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், ஜெய் பிரவீன் சாவ்டா மற்றும் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங் என்ற 2 பேர் சாதிக்அலிக்கு நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்த 3 பேருக்கும் ஒரே பெண் மீது காதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் சாதிக்அலியை படுகொலை செய்து சூட்கேசில் அடைத்துள்ளனர். இதனால், இந்த வழக்கானது சூட்கேஸ் கொலை என்றும் அழைக்கப்பட்டு உள்ளது.

நண்பர்கள் சேர்ந்து சாதிக்அலியை படுகொலை செய்த நிலையில், அவர்களில் ஜெய் சூட்கேசை கொண்டு செல்லும்போது சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சாதிக்அலியின் உடலும் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் போலீசாருக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டது. பிடிபட்ட நபருக்கு வாய் பேச முடியாது. காதும் கேட்காது. இதனால், அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

மும்பை போலீசில் யாருக்கும் சைகையில் பேசவும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில், கித்வாய் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் ராஜேஷ் சத்புதேவுக்கு இந்த விசயம் பற்றி தெரிந்தது.

இவருடைய மகன் கவுரவ் சத்புதே (வயது 23). கவுரவுக்கும் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. அவரின் உதவியுடன் சைகையில் பேசி ஜெய் பிரவீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்படி, சாதிக்அலியின் மனைவி ருக்சானாவை (வயது 30) போலீசார் கைது செய்தனர். ருக்சானாவுக்கு காது கேட்காது. மற்றொரு குற்றவாளியான ஷிவ்ஜீத்தும் கைது செய்யப்பட்டார். அவருக்கும் வாய் பேச முடியாது. காதும் கேட்காது. சாதிக்அலி உள்ளிட்ட 3 பேரும் ஒரே பெண் மீது காதல் வசப்பட்டு உள்ளனர்.

இதில், சாதிக்அலி கொல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள உதவிய கவுரவுக்கு மும்பை காவல் ஆணையாளர் விவேக் பன்சால்கர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். அவரின் முயற்சியாலேயே போலீசாரால் நடந்த விவரங்களை அறிய முடிந்தது என கவுரவின் தந்தை பெருமிதத்துடன் கூறியுள்ளார்.  எனினும், மகனை பற்றிய பிற விவரங்களை வெளியிட விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்