நடிகை சமந்தா விவகாரம்: காங்கிரஸ் மந்திரி சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய கே.டி.ஆர்.
நடிகை சமந்தா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மந்திரி சுரேகாவுக்கு கே.டி.ராமா ராவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.;
ஐதராபாத்,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை.அதன் பிறகு நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். நிச்சயதார்த்தமும் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்தது.
இந்தநிலையில், தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் மந்திரியான கொண்டா சுரேகா தற்போது அளித்த ஒரு பேட்டியில், சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்த சர்ச்சையை கிளப்பினார். அதில் 'சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) செயல் தலைவர் கே.டி ராமா ராவ் தான் காரணம் என்று தெரிவித்திருந்தார். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் என்றும் சுரேகா கூறி இருந்தார்.
இந்த சூழலில் மந்திரி சுரேகாவின் பேச்சிற்கு நடிகை சமந்தா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது பதிவில், "ஒரு பெண்ணாக கிளாமரான இந்த சினிமா துறையில் வந்து பணியாற்றி தனது இடத்தை தக்கவைப்பது என்பது எவ்வளவு பெரியதென உங்களுக்கு தெரியுமா? காதலில் விழுவதும் பின்னர் அதிலிருந்து மீள்வதும்... பின்னர், அதிலிருந்து எழுந்து சண்டையிடுவதும் சாதாரணமானதல்ல. இதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் கொண்டா சுரேகா அவர்களே.
நான் இந்தப் பயணத்தில் என்னவாகியுள்ளேன் என்பது குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தயவுசெய்து இதை சிறுமைப்படுத்தாதீர்கள். அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கனம் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மரியாதையாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டுமென கெஞ்சிக் கேட்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம். எங்களது விவாகரத்து இருவரும் சம்மதத்துடன் இணைந்து எடுத்த முடிவு. இதில் எந்த அரசியலும் இல்லை. உங்களது அரசியல் சண்டையில் எனது பெயரை சேர்க்காதீர்கள். நான் எப்போதும் அரசியலற்றவர். அதிலேயே தொடரவும் விரும்புகிறேன்" என்று நடிகை சமந்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மந்திரி சுரேகாவுக்கு கே.டி.ராமா ராவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பான அந்த நோட்டீசில், சுரேகா தனது பெயரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய அறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சுரேகா தனது பெயரை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார். கொண்டா சுரேகா ஒரு மந்திரி, அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார்" என்று அதில் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.