தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது என்று தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.;

Update:2025-03-13 12:35 IST
தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு

புதுடெல்லி,

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 22-ந் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு வங்காளம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கும், ஒடிசா முன்னாள் முதல்-மந்திரிக்கும் மற்றும் இந்த 7 மாநிலங்களை சேர்ந்த 29 கட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று வழங்கி அழைப்பு விடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன்படி தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடிதம் நேரில் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேலும் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் சிறப்பு அதிகாரி வெங்கட கிருஷ்ணாவை தி.மு.க. எம்.பி. வில்சன் சந்தித்து கடிதத்தை வழங்கினார்.

இதேபோல் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோரை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேற்கு வங்காள எம்.பி. டெரிக் ஓ பிரையனை டாக்டர் கனிமொழி சோமு எம்.பி. சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்த தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.பி.க்கள், கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ எம்.பி., அருன் நேரு, தங்க தமிழ்ச்செல்வன், ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதன்பின்னர் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. தொகுதி மறுவரையறையின் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்