ம.பி.; கேஸ் டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 7 பேர் பலி
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.;

போபால்,
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கேஸ் டேங்கர் லாரி மீது கார் மற்றும் ஜீப் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பத்னாவர்-உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் உள்ள பமன்சுதா கிராமத்திற்கு அருகே கேஸ் டேங்கர் லாரி தவறான பாதையில் திரும்பியபோது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த கார் மற்றும் ஜீப் டேங்கர் லாரி மீது அடுத்துதடுத்து மோதி விபத்துக்குள்ளானதாக தார் மாவட்ட எஸ்.பி. மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரிகள் சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ரத்லம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசம் (ரத்லம், மண்ட்சவுர்) ஜோத்பூர் (ராஜஸ்தான்) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று எஸ்.பி. மனோஜ் குமார் சிங் கூறியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய கேஸ் டேங்கர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.