பெண் டாக்டர் கொலை வழக்கு: கொல்கத்தா உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் சிபிஐ உண்மை கண்டறியும் சோதனை
சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள தவறுகளை மதிப்பிடுவதற்கு உண்மை கண்டறியும் சோதனை உதவும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் உடனான தொடர்புகளை கண்டறிய கொல்கத்தா உதவி சப்-இன்ஸ்பெக்டர் அனுப் துடாவிடம் உண்மை கண்டறியும் சோதனையை சி.பி.ஐ. இன்று தொடங்கியது. இந்த வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 8வது நபர் அனுப் ஆவார்.
சிபிஐ அதிகாரிகளின் கூற்றுப்படி, கொல்கத்தா போலீஸ் நலக் குழுவில் நியமிக்கப்பட்ட அனுப் துடா, போக்குவரத்து போலீஸ் தன்னார்வலராக இருந்த சஞ்சய் ராய்க்கு பல உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சஞ்சய் தான் செய்த குற்றம் குறித்து அனுப்பிடன் தெரிவித்தாரா என்பதையும், குற்றத்தை மறைப்பதற்காக அவர் ஏதேனும் உதவியை நாடினாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் உள்ள தவறுகளை மதிப்பிடுவதற்கு உண்மை கண்டறியும் சோதனை உதவும் என்று தெரிவித்தனர்.