பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரம்: நாளை முதல் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சேவைகளை நிறுத்துவதாக இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.;

Update: 2024-08-11 07:40 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் நேற்று முன்தினம் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன.

2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்த அவர் அங்கு பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக பெண் டாக்டரின் தந்தை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் பெண் டாக்டரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவக்கல்லூரியுடன் தொடர்பு இல்லாத அவர், அங்கு அனைத்து பிரிவுகளுக்கும் சர்வ சாதாரணமாக சென்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பிற டாக்டர்களும் அந்த குற்றவாளியை அடையாளம் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், சியால்டா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அதன்படி இந்த துயர சம்பவம் நடந்த மருத்துவக்கல்லூரி, தேசிய மருத்துவக்கல்லூரி உள்பட கொல்கத்தாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் இளநிலை டாக்டர்கள், முதுநிலை மருத்துவ பயிற்சியாளர்கள் என ஏராளமான டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா, பேரணி என பல்வேறு விதமான போராட்டங்களை அவர்கள் நடத்தினர். இதைப்போல பல மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில், நாளை முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய டாக்டர்கள் சங்கம் (போர்டா) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பெண் டாக்டர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நாளை முதல் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அத்தியாவசிய, அவசர சிகிச்சைகளை தவிர பிற பிரிவுகளில் டாக்டர்கள் எவரும் பணியாற்றப் போவதில்லை. கொலை செய்யப்பட்ட டாக்டருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும், உயிரிழந்த டாக்டரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட வேண்டும். 'மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டம்' விரைந்து அமல்படுத்தப்பட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள டாக்டர்களை உள்ளடக்கிய நிபுணர் குழு அமைக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவிசாய்த்து அரசு நடவடிக்கை எடுக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது" என்று அதில் டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்