கேரளா: கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி; ஐ.சி.யூ வார்டான அரசு பஸ்

அரசு பஸ்சை ஐ.சி.யூவாக மாற்றி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர், நர்சுகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Update: 2024-05-30 03:54 GMT

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திருநாவயா பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் நேற்று அங்கமல்லியில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்ற கேரளா போக்குவரத்துக்கு சொந்தமான அரசு பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார்.

இதையடுத்து சற்றும் தாமதிக்காத டிரைவர், பஸ்சை அருகே உள்ள திரிச்சூர் அமலா மருத்துவமனையை நோக்கி ஓட்டி சென்றார். அப்போதும் அந்த பெண் பிரசவ வலியால் அலறி துடித்தார். இதையடுத்து மருத்துவமனை வாசலில் பஸ் நிறுத்தப்பட்டது. பெண்ணின் கதறல் சத்தத்தை கேட்ட டாக்டர்கள் ஒரு நொடி கூட தாமதிக்க கூடாது என்பதை முடிவு செய்தனர். இதனால் நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஸ்ட்ரெச்சரை எடுத்து பஸ்சின் வாசலில் வைத்து பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதாவது கர்ப்பிணி பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பனிக்குடம் உடைந்து குழந்தை பிறக்கும் நிலையில் அவர் இருந்தார்.

இதையடுத்து பஸ்சில் இருந்து பெண்ணை வெளியே கொண்டு வந்து மருத்துவமனை அறைக்கு கொண்டு செல்வதற்குள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மருத்துவகுழுவினர் உறுதியாக இருந்தனர். இதனால் டாக்டர்கள், நர்ஸ்கள் அனைவரும் பிரசவத்துக்கு தேவையான உபகரணங்களை எடுத்து பஸ்சுக்குள் ஏறினர். அங்கு பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பஸ்சுக்குள் வைத்தே பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த பெண் மற்றும் குழந்தை ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதற்கிடையே தான் கர்ப்பிணிக்கு அரசு பஸ்சுக்குள்ளேயே பிரசவம் பார்க்கும் பரபரப்பான காட்சிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த கேமராவில் பதிவான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கர்ப்பிணியின் நிலை அறிந்து பஸ்சை உடனடியாக மருத்துவமனைக்கு திருப்பிய பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சையே ஐ.சி.யூ வார்டுபோல் மாற்றி கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தையை காப்பாற்றிய மருத்துவகுழுவை  பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்