நடிகைகள் புகாரில் அடுத்த திருப்பம்: நடிகர்கள் முகேஷ், இடவேல பாபு ஆகியோருக்கு முன்ஜாமீன்
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேசுக்கு முன் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரை உலகை, புரட்டிப்போட்டு உள்ளது. ஹேமா கமிஷன் அறிக்கைக்கு பின்னர் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். மலையாள நடிகர் சங்கமே ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் புகார்களால் மலையாளத் திரை உலகமே கலகலத்துப்போய் உள்ளது.
இந்நிலையில் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலையாள நடிகரும், கொல்லம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மற்றும் நடிகரும், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் அதிகாரியுமான இடவேல பாபு ஆகியோருக்கு எர்ணாகுளம் முதன்மை சார்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக எர்ணாகுளத்தில் உள்ள மரடு காவல் நிலையத்தில் முகேஷ் மீது பிணையில் வர முடியாத வகையில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே போன்று திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இணைவதற்கு உதவுவதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்த இடவேல பாபு மீது வடக்கு எர்ணாக்குளம் காவல்நிலையத்தில் பிணையில் வர முடியாத சட்டப்பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து முகேஷ் மற்றும் பாபு ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.