மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது.;
கேதார்நாத்,
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்- கௌரி குண்ட் வழித்தடத்தில் ஆற்றை தாண்டி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆன்மீக யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், 150 முதல் 200 யாத்ரீகர்கள் கேதார்நாத்தில் சிக்கித் தவிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் கோவிலுக்குச் செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேக வெடிப்பு கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவுக்கு வழிவகுத்தது, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பாதை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, மேக வெடிப்பு சம்பவத்தில் அங்கு இதுவரை எந்த உயிரிழப்பும், காயமும் பதிவு செய்யப்படவில்லை.
உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டது. இடிபாடுகளுக்கு அடியில் 42 வயது பெண்ணும், அவரது மகளும் புதையுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டோலி கிராமத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த சரிதா தேவி மற்றும் 15 வயது அங்கிதாவின் உடல்களை மீட்புப் படையினர் வெளியே எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.