வழக்குகள் விசாரணை: சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை ரத்து செய்தது கர்நாடக அரசு

பல வழக்குகளில் சி.பி.ஐ. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மந்திரி எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.

Update: 2024-09-26 15:04 GMT

பெங்களூரு:

டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபன சட்டம், 1946 பிரிவு 6-ன்படி எந்தவொரு வழக்கிலும் விசாரணை நடத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் சி.பி.ஐ. அனுமதி பெற வேண்டும். ஆனால், தங்கள் மாநிலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை தடையின்றி விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ.க்கு உதவ பொதுவாக மாநிலங்களால் பொது ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அந்த மாநிலங்களில் பொதுவான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கலாம்.

இவ்வாறு வழக்குகளை விசாரிப்பதற்கு சி.பி.ஐ.க்கு அளித்த பொது ஒப்புதலை திரும்ப பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய மந்திரி எச்.கே.பாட்டீல், "டெல்லி சிறப்புக் காவல் ஸ்தாபன சட்டம், 1946-ன் கீழ், கர்நாடக மாநிலத்தில் குற்ற வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ.க்கு பொது ஒப்புதல் வழங்கும் அறிவிப்பாணை வாபஸ் பெறப்பட்டது" என்றார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சி.பி.ஐ. அல்லது மத்திய அரசு தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும்போது அவற்றை நியாயமாக செயல்படவில்லை என்பது தெரிந்ததால் பொது ஒப்புதல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு வழக்காக நாங்கள் சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவோம்,

பல வழக்குகளில் சி.பி.ஐ. தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஒவ்வொரு நாளும் கவலை தெரிவிக்கப்படுகிறது. சி.பி.ஐ.க்கு மாநில அரசு கொடுத்த வழக்குகள் அல்லது சி.பி.ஐ. ஏற்றுக்கொண்ட வழக்குகளில் கூட, பல வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பல சுரங்க வழக்குகளை விசாரிக்க மறுத்தனர். " என குற்றம்சாட்டினார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (முடா) நில ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டுள்ள முதல்-மந்திரியை பாதுகாக்க இவ்வாறு செய்யப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த பாட்டீல், "முதல் மந்திரி மீது லோக்ஆயுக்தா விசாரணை நடத்தும்படி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இத்தகையே கேள்விக்கே இடமில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்